Tuesday, February 11, 2014

கிராம வரலாறு

நகரங்களில் வாழ்வதும், வேலை செய்வதும் தான் அந்தஸ்து, பெருமை என்று நினைத்துக்கொள்ளும் நகரவாசிகளுக்கு தெரிவதில்லை,
பசுமையும், எளிமையும் நிறைந்த கிராமங்களின் அருமை.

கிராமங்களில் தான் இன்னும் தமிழனின் வாழ்க்கைமுறை அழியாமல் இருக்கிறது.

அந்த மக்கள் பள்ளிக்கு செல்லவில்லை. ஆனால், பட்டறிவில் பட்டம் பெற்றிருந்தனர்.

பணம் சம்பாதிக்கும் நுணுக்கம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் உறவுகளின் உன்னதத்தை உணர்ந்திருந்தனர்.

இன்றைய நகர குழந்தைகளிடம் காணாமல் போன வெகுளித்தனம், இன்னும் அங்குள்ள தமிழனிடம் உள்ளது.

குறைசொல்லிக் கொண்டே இருக்கும் சில பாட்டிகளை பார்க்கும் போது, கோபம் வருவதற்க்கு பதில் உதட்டில் புன்னகைதான் பூத்தது. :)

ஒரு வீட்டில் உறவினர் வந்தால், ஊரே விருந்து சமைத்து கொண்டாடும் அழகுக்கு ஈடே இல்லை.

ஆங்கிலேயனின் வருகைக்கு பின் தொலைந்து போன பண்டமாற்று முறை கிராமங்களின் வறுமையை சற்று தணிக்கிறது.

ஹரப்பா, மொஹஞ்சதாரோ பற்றி வரலாற்றில் படித்து நாம் தெரிந்துகொண்டது போல, நாம் கிராமங்களில் வாழ்ந்த வாழ்க்கையும் நமது சந்ததிகளுக்கு வரலாறாக செல்லப்போகிறது :( :(

Saturday, February 25, 2012

பெயர் என்ன ?

உன்னை அறிய வைத்தாய்
என்னை தெளிய வைத்தாய்
உறவை புரிய வைத்தாய்
பாசத்தை பகிர வைத்தாய்

தாயும் ஆனாய், தந்தையும் ஆனாய்
உடன் பிறப்பானாய், என் உடனும் பிறந்தாய்
ஆசான் ஆனாய், என் அறிவும் ஆனாய்
தோழியானாய், என் தோழனும் ஆனாய்...
கனவானாய் என் கவிதையும் ஆனாய்

மொத்தத்தில் நீ என் உறவின் மகுடம் ஆனாய்..

இறைவா... உன்னை இப்படியும் அழைக்க விழைகிறேன்...

ஆனால் அதனினும் மேலாய் என்னை காப்பவன் நீ...

உனது  பெயர் என்ன..?!!!




Wednesday, May 11, 2011

ஐந்து பெரிது, ஆறு சிறிது - (படித்ததில் பிடித்தது) - வைரமுத்து

"சீ மிருகமே!"
என்று மனிதனை திட்டாதே
மனிதனே..
*
ஏந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை

எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா?
*
எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?
*
எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
*
எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
*
கவனி மனிதனே
கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
*
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழுநோய்
விலங்குகளுக்கில்லை
*
மனிதா
இதை
மனங்கொள்

கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை
*
ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை

எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை
*
இப்பொது சொல்

அறிவில்
ஆறு பெரிதா?
ஐந்து பெரிதா?
*
மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு

மாண்டால் -
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோகை விசிறி
யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபரணம்
*
நீ மாண்டால்...
சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்
*
ஒன்று கேட்கிறேன்

எல்லா விலங்கும்
மனிதனுக்கு பாலூட்டும்

எவளேனும் ஒருதாய்
விலங்குக்குப் பாலூட்டியதுண்டா?
*
"சீ மிருகமே!"
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
*
கொஞ்சம்பொறு
காட்டுக்குள் என்ன சத்தம்...

ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது

"சீ மனிதனே!" 

Sunday, April 24, 2011

காதல் உலகில்....

மாற்றங்களால் ஆளப்படுகிறது என் உள்ளம், தினம் தினம்..
ஆனால் பக்குவமாய் உன் வசம் மட்டும்.

என்னை மொய்க்கும் உன் நினைவுகள்..
உயிர்ப்பை மரணிக்க செய்யும் உன் வார்த்தைகள்..
உருகும் என்னில் மெருகும் நம் காதல்..
இவைதான் என் உயிரை உள்வாங்கும் மர்மங்களா??


Friday, April 15, 2011

கனா கண்டேனடி...



தாருக்கு பதிலாக தங்கத்தை ஊற்றி அதை சாலையாக்கி,
அதில் வெண்ணிற ஆடை போற்தினாற்போல் வெள்ளி மழை பொழிய,
பவள முத்துக்கள் துளிகளாய் ஒட,
பன்னீர் வாசனையும் பெய்துகொண்டிருக்க,
கத்தாயாய் இருந்த பணத்தை கப்பலாக்கிக் கொண்டிருந்தனர் கள்ளகபடமில்லா சிறுமியர்...
சாலைடயின் இருமங்கிலும் சந்தன பூக்கள் மணம் வீச,

அங்கே...

"சாதி" எனும் சாக்கடை ஒடவில்லை..
"சாந்தம்" எனும் நீரூற்று மட்டும் ஓடிற்று..
இதுவே நான் கண்ட கனவு..
கனவை நினைவாக்க புத்தம் புது பூமி வேண்டும்..
ஆம்.. சாதி மத பேதமில்லா புத்தம் புது பூமி வேண்டும்....!!!

மாற்றமாய் நீ....


உன் மீது நான் கொள்ளும் கோபங்கள், ஏனோ காற்றுக்குமிழ் போல் அடுத்த நொடியே மறைந்து விடுகின்றன?
உன் வார்த்தையில் மட்டுமில்லை மாயம், உன் மௌனத்திலும் தான்...

காற்றுவழியே நீ செய்யும் விந்தைகள் பல நூறு..
காலந்தனையே கேட்கச்சொல்லும் வார்த்தை வரலாறு..

நினைவில் மிதக்கிறாய், உயிரில் கலக்கிறாய்..
நீ செய்யும் லீலைக்களில், கண்ணனும் தோற்றுப்போகிறான்...
கள்வனே - நீ கடவுள் என்பதையும் உணர்த்திவிட்டாய்...

வேறு என்ன நான் சொல்ல, நித்தமும் உன் வழிச் செல்ல
ஏங்கும் பாவையின் உயிர் கொல்ல, வருவாய் நீ தினம் மெல்ல.


Saturday, March 12, 2011

கடவுளின் மற்றொரு படைப்பு


உறக்கத்தில் இருந்து விழித்தார் கடவுள்...
எப்போது உறக்கத்தில் மூழ்கினார்? - வேண்டாம் இக்கேள்வி..

நடமாடி நாட்கள் ஆயின... நாளை பூமி செல்வோம் என்றார்..
ஓட்டை விழுந்த ஒசோன் வழியே வடிக்கட்டபடாமல் வந்து சேர்ந்தார்..

தாம் படைத்தவற்றை பார்க்கும் ஆவலில் பூமியின் நிலபரப்பை காண,
கால் வைக்க இல்லை ஓர் இடம், கட்டிடங்களின் கலாச்சாரம் அங்கே..

இடது வலது புறங்களில் பார்க்க, குப்பை இல்லா குப்பைத்தொட்டிகள் அங்கே..
குப்பையாகி போன குளங்கள் இங்கே..
கூட்டத்தின் நெரிசலில் சிக்கி பசித்துப்போனார்..

உணவிற்காக காடுகளை நோக்கினார்... இல்லை இனிய கனிகள் அங்கே.
படைக்கப்பட்டவை எதும் இல்லை இங்கே.

கோவினுள் சென்றாவது ஓய்வு எடுக்கலாம் என எண்ணி அங்கே செல்ல,
காசு கேட்டு மறித்தனர் அவரை நுழைவு கட்டணம் என்ற பெயரில்..



தன் தாய் பூமியை அழைத்தார்.

ஏன் இவ்வளவு அமைதி, பொறுமை- ஆவேசத்துடன் கடவுள் வினவ..

என்ன செய்ய கடவுளே... கொஞ்சம் கோபப்பட்டாலும் அறியா பச்சிளங்குழந்தைகள் தீயில் கருகுகின்றனர்..

சரி.. சற்று மாறுபட்டு சுனாமியாக எழுந்தால் சுரண்டுபவர்கள் சுகம் பெறுகின்றனர்..

பூமித்தாய்க்கு அழ கண்ணீர் இல்லை, கண்ணீரெல்லாம் கடலாகிப்போனது..

ஆமாம், ஏன் உன் உடபெல்லாம் இத்தனை தழும்புகள்? - கடவுள் கேட்டார்.
இவை இம்மக்கள் என்னை அணுகுண்டு போட்டியால் பிரித்துக் கொண்ட நாடுகளின் எல்லை கோடுகள்தாம்..

ஆமாம் நான் உனக்கு கொடுத்த பச்சை புடவை எங்கே?-கடவுள் கேட்க,
மனிதர்களின் கண்டுபிடிப்பான அறிவியல் எனும் கைகளை கொண்டு உள்ளமின்றி உருவிக்கொண்டனர் என்றது பூமி.

தன் மகன் சூரியனை அழைத்தார்.

ஏன் சூரியனே! சூடாறி போய் உள்ளாய்? கடவுள் கேட்டார்
ஆம் கடவுளே, சோலார் அடுப்பினில் அல்லவா என் சுடர் அடங்கி விட்டது..

நீ சற்று சூடானால் என்ன??
சூடானாலும் என்ன செய்ய கடவுளே, குளிர் பெட்டியினுள் அல்லவா ஒளிந்து கொள்கின்றனர்.

என்னை சுற்றுவதில் எது இயற்கை கோள்கள், எது செயற்கை கோள்கள் என தெரியவில்லை ஆண்டவனே!

என்னை காப்பாற்றுங்கள் இறைவா!! செயற்கை கோள் மூலம் என் சக்தியை உறுஞ்சப்போகிறார்களாம்..

கோள்கள் என்னை சுற்றுவது போல், பல செயற்கை கோள்களை அமைத்து அதை நான் சுற்றிவர திட்டமிட்டுள்ளார்களாம்.
சூடாறிப்போன சூரியன் முறையிட்டு சுருண்டது...

தன் தம்பி காற்றை அழைத்தார்.

அவன் வரும்முன்பே இருமினார் கடவுள்..

கண்களுக்கு தெரியாதவானாய் படைத்தார் இறைவன், இப்போது கண்களையே கசக்க வைத்தான்.
புகை மூட்டமாய் புதைந்து போனான் காற்று.

எப்படி இவ்வளவு மாசு? - கடவுள் கேட்க,

வாகனங்கள் கக்கிய புகை, வரிசையில் எரியும் பிணத்தின் புகை,
மனிதர்கள் விடுகின்ற சிகரெட் புகை, அணுகுண்டுகளின் சீக்ரெட் புகை, என கலங்கியது காற்று.


தன் தங்கை தண்ணீரை அழைத்தார்.

மதுக்கடையில் பாட்டில்களாகவும், தண்ணீர் பொட்டலமாகவும்,
20 ரூபாய்க்கு ஒரு வாளி என்றாகியும் போன தன் தங்கையின் நிலைகண்டு திகைத்துப்போனார்.

கையை எடுத்து தலையில் வைத்து கும்பிட்டுவிட்டு,
வேண்டாம் இவ்வுலகம் என தப்பிச் சென்றார் வேறொரு கிரகம்...

அங்கு சென்று தம் மனம் விரும்பியதை படைத்தார்,

ஓடும் நீரோடை, அதில் கொட்டும் அருவி,

அருகில் ஆலமரம், அதில் பல குருவி,

சாக்கடை கலக்காத சமுத்திரம், சரிவில் கணக்கான் சங்கீதம்,

குயில்களின் இனிய இசை, தென்றலின் வருடல்,

பூக்களின் புது வசந்தம், பூரிக்க வைக்கும் வண்ணங்கள்,

புலியும் மானும் சேர்ந்து வாழ குகை,

கனி நிறைந்த சோலை, கண்ணுக்கினிய மாலை,

காடுகளின் நெடிய வழி, காட்சிகளை கவரும் விழி,

ஒற்றுமையுடன் வாழும் விலங்குகள், ஒரு வகையும் விடாத தாவரங்கள்,

சந்தன காற்று, பன்னீர் தண்ணீர், வெதுவெதுப்பான சூரியன்,

தழும்புகள் இல்லா பசுமை போர்த்திய  நிலம்,


என எல்லாவற்றையும் படைத்தார்,

ஜாக்கிரைதாக மனிதனைத் தவிர....